திரு.பஞ்சலிங்கம் செல்லப்பா அவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராய், கரந்தனில் 1942 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 8 ஆம் நாள் பிறந்தார். இவர் “பஞ்சு” என்று அன்போடும் “முதலாளி” என்று மரியாதையுடனும் அழைக்கப்பட்டார். திரு.பஞ்சலிங்கம் அவர்கள் நல்லதெரு கணவனாகவும், தந்தையாகவும், மாமாவாகவும், பேரனாகவும், பூட்டனாகவும், மற்றும் நல்லதொரு மனிதனாகவும் வாழ்ந்து, தனது 82ஆவது வயதில், 2025 ஆம் ஆண்டு தை மாதம் 6 ஆம் திகதி அதிகாலை தனது அன்பு மனைவியை ஆரத்தழுவி விடைபெற்றுவிட்டு, இளைய மகள் தர்சினி, மருமகன் துசி அருகாமையில் அவர்களது இல்லத்தில் அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
இவர் இலக்ஷ்மிப்பிள்ளை-செல்லப்பா தம்பதியருக்கு ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தார். இவர் மூன்று மூத்த சகோதரிகளும், நான்கு சகோதரர்களும் உள்ள பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். இவரது இளமைக்காலம் அவருடைய சகோதர, சகோதரிகளுடனும், சகோதரிகளின் பிள்ளைகளுடனும் மிகவும் அழகாக இருந்தது.
இவருடைய இளம் வயதிலேயே குடும்பத்தின் பொருளாதார சிரமங்களின் காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி நகரத்திற்கு சென்று, அவருடைய சகோதரருடன் ஒரு வியாபார நிலையத்தில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கு அவர் தினசரி 12 மணி நேர வேலை செய்தார். ஏழு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து தந்தையாரின் குடும்பத்திற்கு ஆதரவளித்தார்
இவரது தந்தையின் எதிர்பாரத திடீர் மறைவினால் ஏற்பட்ட குடும்ப சோகமும், முதன்மைப் பொறுப்பும் அவரின் 18 ஆவது வயதிலேயே அவர் எதிர் கொள்ள வேண்டி இருந்தது.
1960 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் கோண்டாவிலில் தனது மாமாவுக்கு சொந்தமான ஒரு கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு அவர் அந்தக் கடையை சொந்தமாக வாங்கி, தனது தொழில் முயற்சியின் பலனாக வியாபாரத்தில் ஓர் மைல் கல்லை அடைந்தார்.
**திருமணம் மற்றும் குடும்பப் பொறுப்புகள் **
1967 ஆம் ஆண்டில், பொது நிகழ்வுகளில் அவரின் மனைவியின் அழகையும், திறமையையும் கண்டு அவர் மீது காதல் கொண்டார். இரு பக்க குடும்பத்தினரின் அனுமதியுடன், 1968 ஆம் ஆண்டு தனது 25 ஆவது வயதில் மனோகராணியை திருமணம் செய்து கொண்டார்.
1969 ஆம் ஆண்டில் அவர்களுக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது.
1970 ஆம் ஆண்டு, இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த வேளையில் அவரின் மனைவியின் பெற்றோர் இருவரும் ஒரேநாளில் இறைபதம் எய்திய சோகம் அவரின் குடும்பத்தை ஆட்கொண்டது. அன்றிலிருந்து தன் மனைவியுடைய சகோதரர்களையும், தன் சொந்தச் சகோதரர்கள்போல் எண்ணி தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவரின் மனைவிக்கு பக்கபலமாய் இருந்தார்.
அதேவேளை தனது மூத்த அக்காவின் பிள்ளையையும் தனது வீட்டில் இருந்து படித்து படிப்பில் உயர வழி வகுத்துக் கெடுத்தார். கடின உழைப்பின் மகத்துவத்தை வாழ்க்கையில் காட்டினார்.
கோண்டாவிலில் வாழ்க்கை அமைத்தல்
1972 ஆம் ஆண்டில், திரு.பஞ்சலிங்கம் அவர்கள் கோண்டாவிலில் தனது முதல் சொந்த நிலத்தை வாங்கி, ஒரு சிறிய மண் வீட்டைக் கட்டினார். அதேசமயம், தனது கடையையும் நன்றாகச் செயல்படுத்தியதுடன், குத்தகைக்கு நிலம் எடுத்து அதிலே காய்கறி மற்றும் புகையிலை விவசாயத்தையும் செய்தார்.
1974 ஆம் ஆண்டிற்குள், குடும்பத்தில் ஐந்து குழந்தைகள் வரை இருந்ததால், அவர் ஒரு கல்வீட்டை கட்டத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டில் அதைக் கட்டி முடித்து குடும்பத்துடன் புதிய வீட்டில் குடியேறினார்.
போரினால் ஏற்பட்ட மாற்றம்
1985 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்ததால் தனது முதல் மூன்று குழந்தைகளையும் கனடாவுக்கு அனுப்பினார். 1987 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் போரின் காரணமாக குடும்பங்கள் இடப்பெயர்ந்தன.
தனது கடைசி இரு பெண் பிள்ளைகளின் நலன் கருதி
1991 ஆம் ஆண்டு திரு.பஞ்சலிங்கம் அவர்கள் தனது குடும்பத்தை முழுமையாக கனடாவிற்கு அழைத்துச் செல்லும் முக்கிய முடிவை எடுத்தார். 1991 ஆம் ஆண்டு இவரின் மூத்த மருமகன் மகள் அழைக்க கனடாவுக்கு குடும்பமாக வந்தார்.
கனடாவில் வாழ்க்கை
கனடாவில் தனது கடின உழைப்பையும் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் முழுமையாக அர்ப்பணித்தார். இவரும் இவருடைய மனைவியும் சேர்ந்து உழைத்ததின் பலனாக இவரின் கடைசி இரு மகள்களுக்கும் மிகவும் விமர்சையாய் திருமணம் செய்து வைத்தனர். இவர்களது குழந்தைகள் கல்வியில் முன்னேறி வாழ்வில் வெற்றியை அடைந்தனர். அவரது குழந்தைகள் திருமணம் செய்து கொள்ள, அவருக்கு பேரன்கள், பேத்திகள் ஆகியோர் சேர்ந்தனர். புதிதாகப் பிறந்து வந்த உறவுகளின் அன்பில் அவர்கள் மகிழ்ந்திருந்தார்கள்.
அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து உலகநாடுகள் பலவற்றிற்குப் பயணம் செய்து உல்லாச வாழ்க்கையையும் அனுபவித்தனர். பேரப்பிள்ளைகள் படிப்பில் உயர்ந்து பட்டங்கள் பெறும் போதெல்லாம் பெருமையின் உச்சத்துக்கே சென்று விடுவார். அவரின் கடைசி பேத்திமார் மூவரின் வளர்ச்சியையும் அன்பையும் கூடவே இருந்தது பார்த்து மகிழ்ந்தார். இவரின் முதல் மூன்று பேத்திகளின் திருமணத்தையும் பார்த்து மகிழ்ந்தார். அவர்களுடைய கணவர்களையும் தன்னுடைய பேரன்கள்போல் எண்ணி அன்பு செலுத்தினார்.
இவர் தனது 80 ஆவது வயதில், உடல் நலக்குறைவு காரணமாக வாகனம் ஓட்டுவதை நிறுத்தினார். ஆனால், குழந்தைகளும் பேரன் ,பேத்திகளும் அவருக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தனர். அவரின் இறுதிக் காலத்தில் அவரின் முதல் பேத்தி மூலமாய் அவருக்கு இரண்டு அழகான, அன்பான பூட்டப்பிள்ளைகள் கிடைத்தனர். இது அவரின் வாழ்க்கையை முழுமைப் படுத்தியது. அவர்களின் வருகையால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்.
திரு.பஞ்சலிங்கம் செல்லப்பாவின் வாழ்க்கை, அவரது தன்னலமற்ற காதல் அமைதி, மற்றும் பெருமிதமான முயற்சிகளால் அனைவருக்கும் ஈர்ப்பும், உணர்வும் அளிக்கிறது. அவரது மரியாதையும், விடாமுயற்சியும் அவரின் தலைமுறையினருக்கு எப்போதும் ஓர் எடுத்துக்காடாகத் திகழ்கிறது.